என் மலர்
இந்தியா
9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 61 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை - மம்தா பாராட்டு
- வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது.
மேற்கு வங்கத்தில் சவுத் 24 ஜேநகர் பகுதியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 9 வயது சிறுமி டியூஷன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முஸ்தகின் சர்தார் என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். மறுநாள் காலை குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியின் உள்ளூர் வாசிகள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், போலீஸ் நிலைகளை சேதப்படுத்தினர்.
சிறுமியின் சடலம் ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலைக்கு பின் நடந்த இந்த மற்றொரு சம்பவம் பொதுமக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்கப்படும் என மம்தா உறுதியளித்தார்.
அதன்படி மேற்கு வங்க போலீஸ் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) வழக்கை விசாரித்து 30 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் சிறுமியின் உடலில் 45 காயங்கள் இருந்ததாகவும் குற்றவாளி முஸ்தகின் சர்தார் தான் எனவும் உறுதி செய்யப்பட்டது
விசாரணையின் போது 36 சாட்சிகள் ஆஜரான நிலையில், பருய்பூர் விரைவு நீதிமன்றம் நேற்று [வியாழக்கிழமை] முஸ்தாகின் சர்தாருக்கு மரண தண்டனை விதித்தது. குற்றம் நடந்து 61 நாட்களில் மரண தண்டனை வழங்கப்படுவது மேற்கு வங்கத்தின் நீதித்துறை வரலாற்றில் அரிதானதாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இரண்டு மாதங்களில் இதுபோன்ற ஒரு வழக்கில் தண்டனை அதுவும் மரண தண்டனை வழங்கப்படுவது மாநில வரலாற்றில் முதல் முன்னோடியாக அமைந்துள்ளது . இந்த சிறந்த சாதனைக்காக மாநில காவல்துறை மற்றும் வழக்குத் தொடர்பாக பணியில் ஈடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், என்று தெரிவித்துள்ளார்.