என் மலர்
இந்தியா
பஞ்சாப் முதல் மந்திரியாக திட்டம்: லூதியானாவில் கெஜ்ரிவால் போட்டி?
- பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
- இக்கூட்டத்துக்கு முன் ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க.வில் இணைவர் எனும் வதந்தி பரவுகிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது.
இதற்கிடையே, பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு முன் கட்சித்தாவல் வதந்தி பரவி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களை தலைநகர் டெல்லிக்கு அழைத்துள்ளார்.
கட்சியின் உயர்மட்டத் தலைமையின் கவனம் தற்போது அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே மாநிலமான பஞ்சாபின் மீது திரும்பியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பஞ்சாப் முதல் மந்திரியாகும் வகையில் அங்கு காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆபரேஷன் தாமரை திட்டத்தின் ஒரு பகுதியாக தனது எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என ஆம் ஆத்மி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது. எனவே, டெல்லி போல் பஞ்சாப்பிலும் இதுபோன்ற வீழ்ச்சி ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.