என் மலர்
இந்தியா
வேட்புமனு தாக்கல் கடைசி நாளுக்கு முன் கூட்டணி குறித்து இறுதி முடிவு: ஆம் ஆத்மி
- ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் 10 இடங்களை கேட்கிறது ஆம் ஆத்மி.
- ஏழு தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது.
அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி (அக்டோபர்) சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற வகையில் ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களை கேட்கிறது.
ஆனால் ஏழு தொகுதிகள் மட்டுமே வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 12-ந்தேதி கடைசி நாளாகும். அதற்கு முன்னதாக கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகவ் சதா கூறுகையில் "காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைவதில் மகிழ்ச்சியாக உள்ளன. கூட்டணி அமையும் என நம்பிக்கை உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12-ந்தேதியாகும். அதற்கு முன் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்லது இரு கட்சிகளுக்கு ஆதாயம் என்ற நிலை இல்லாமல் இருந்தால், நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை விட்டுவிவோம்.
கூட்டணிக்கான நேர்மறையான நிலை சென்று கொண்டிருக்கிறது. பேச்சுவா்த்தைகள் நல்ல நிலையில் இருக்கிறது. அரியானாவின் நலன், நாட்டு மக்களின் நலன், ஜனநாயத்தின் நலனுக்கான பேச்சுவார்த்தை நல்லதாக முடியும் என நம்புகிறேன். பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட அனைத்தையும் வெளிப்படையாக கூற முடியாது" என்றார்.