search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    500 ரூபாய் கள்ளநோட்டு வழக்கில் கைதான கேரள அரசு பெண் அதிகாரி பணியிடை நீக்கம்
    X

    500 ரூபாய் கள்ளநோட்டு வழக்கில் கைதான கேரள அரசு பெண் அதிகாரி பணியிடை நீக்கம்

    • ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரத்தை செலுத்த சென்றார். வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்தபோது, அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 7 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணத்தை அவரிடம் கொடுத்தது எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷாமோள் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆனால், கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. ஜிஷாமோள் இதற்கு முன்பு மாராரிக்குளம் பகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்தே அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.

    இந்தநிலையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளிவரும் என அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×