search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள்: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
    X

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள்: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

    • போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
    • போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும்.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையை பொருத்தி, இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின. பிரதமர் மோடி போன்ற போலி வீடியோவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

    இந்நிலையில், போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் சம்மதித்துள்ளன.

    போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும். விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்றே தொடங்கப்படும். குறுகிய காலத்தில், புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

    ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ, புதிய சட்டமோ கொண்டு வரப்படும்.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும், புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×