search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் மீட்பு- நிர்மலா சீதாராமன் தகவல்
    X

    ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன் மீட்பு- நிர்மலா சீதாராமன் தகவல்

    • வாராக்கடன்களை மீட்பதில் மோடி அரசு கருணையே காட்டாது.
    • வங்கித்துறையை வலுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் மோடி அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில், வங்கித்துறை ரூ.3 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டி, குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி உள்ளது. பிரதமர் மோடியின் வலிமையான, உறுதியான தலைமையால் வங்கித்துறை திருப்பத்தை சந்தித்துள்ளது. வங்கித்துறையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்த பாவங்களுக்கு எங்கள் அரசு விரிவான சீர்திருத்தங்கள் மூலம் பரிகாரம் செய்துள்ளது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அதன் தலைவர்கள் தொலைபேசி மூலம் வங்கிகளை நிர்பந்தித்து, தகுதியற்ற தொழில் அதிபர்களுக்கு கடன்களை அளிக்கச் செய்தனர். அப்போதெல்லாம் கடன் வாங்குவதற்கு வர்த்தக திறன் முக்கியம் இல்லை. சக்திவாய்ந்த நபர்களுடன் தொடர்பு இருந்தால் போதும்.

    கடனுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு, முறையாக பரிசீலிப்பதையோ, அபாய காரணிகளை மதிப்பிடுவதையோ கைவிடும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டன. அப்போதுதான், வாராக்கடன் பிரச்சனைக்கு விதை போடப்பட்டது.

    கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு வங்கித்துறையில் சீர்திருத்தங்களை புகுத்தியது. வங்கிகளில் அரசியல் தலையீடுக்கு பதிலாக, தொழில் நேர்மையும், சுதந்திரமும் புகுத்தப்பட்டன.

    அதன்பலனாக, கடந்த 10 ஆண்டுகளில் வாராக்கடன்களில் ரூ.10 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, 1,105 வங்கி மோசடி வழக்குகளை விசாரித்தது. அதன்மூலம், குற்றச்செயல் மூலம் பெறப்பட்ட ரூ.64 ஆயிரத்து 920 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, ரூ.15 ஆயிரத்து 183 கோடி மதிப்புள்ள சொத்துகள், மீண்டும் பொதுத்துறை வங்கிகளிடமே சேர்க்கப்பட்டன.

    வாராக்கடன்களை மீட்பதில் மோடி அரசு கருணையே காட்டாது. குறிப்பாக, பெரிய அளவில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களிடம் கருணை காட்ட மாட்டோம். வாராக்கடன் மீட்புப்பணி நடந்து வருகிறது.

    எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடன் தள்ளுபடிக்கும், வாராக்கடன்களை கடன் புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கும் இன்னும் வேறுபாடு தெரியாதது பரிதாபமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, கடன் புத்தகத்தில் இருந்து நீக்கி விட்டாலும், அந்த கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் தீவிரமாக ஈடுபடும். எந்த தொழில் அதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

    வங்கித்துறையை வலுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் மோடி அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும். நாட்டின் வளர்ச்சி பாதைக்கு வங்கிகள் துணைநிற்கும்.

    குடும்ப கட்சிகள் நிறைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, குடும்ப நலனுக்காக வங்கிகளை பயன்படுத்தியது. ஆனால், நாங்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்துகிேறாம். காங்கிரசின் செயல்கள், படித்தவர்களுக்கும், மேல்தட்டு மக்களுக்கும் மட்டுமே பயன்பட்டது. நகரங்களில் மட்டுமே வங்கி வசதி இருந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×