search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாகரிக சமூகத்தில் புல்டோசர் நடவடிக்கையை ஏற்க முடியாது -  தலைமை நீதிபதியாக சந்திரசூட் கடைசி தீர்ப்பு
    X

    நாகரிக சமூகத்தில் புல்டோசர் நடவடிக்கையை ஏற்க முடியாது - தலைமை நீதிபதியாக சந்திரசூட் கடைசி தீர்ப்பு

    • வழக்கு விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
    • டி.ஒய்.சந்திரசூட் பதவிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது.

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.

    சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

    உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக மாநில அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.

    இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனோஜ் திப்ரேவால் ஆகாஷ் என்பவரது பூர்வீக வீடு கடந்த 2019-ம் ஆண்டு உரிய முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேவி பார்த்திவலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

    விசாரணையின்போது பேசிய சந்திரசூட், புல்டோசர் மூலம் நீதி என்பது நாகரீகமடைந்த மனித சமுதாயத்தில் இல்லாத ஒன்று. புல்டோசர் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையை அனுமதித்தால் பழிவாங்கும் நடவடிக்கைக்காகக் குடிமக்களின் சொத்துக்கள் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது. மக்களின் குரலை அவர்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை அழிக்கும் அச்சுறுத்தலால் ஒடுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதிப் பாதுகாப்பு வீடுதான்.

    சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். புல்டோசர் நீதி அனுமதிக்கப்படுமானால், சொத்துரிமைக்கான அரசியலமைப்பு சட்டத்தின் 300ஏ பிரிவு ஒரு உயிரற்ற காகிதமாக மாறிவிடும்.

    இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்ட அல்லது அதற்கு அனுமதியளித்த மாநில அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார்.

    இவரது பதவிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11-ந்தேதி(நாளை) பதவி ஏற்க உள்ளார்.

    Next Story
    ×