என் மலர்
இந்தியா

வாக்கிங் சென்ற தொழிலதிபர் சுட்டுக்கொலை.. பொது பாத்ரூம் சண்டையில் கத்திக்குத்து.. அடுத்தடுத்து பயங்கரம்

- யமுனா விளையாட்டு வளாகத்தில் இன்று காலை வாக்கிங் சென்றார்
- ஏழு முதல் எட்டு சுற்று ரவுண்டுகள் சுட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் அதிகாலை வாக்கிங் சென்ற 53 வயது தொழிலதிபர் பைக்கில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியின் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள ஃபார்ஷ் பஜார் பகுதியில் யமுனா விளையாட்டு வளாகத்தில் இன்று [சனிக்கிழமை] காலை சுனில் ஜெயின் [53 வயது] நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவர் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஏழு முதல் எட்டு சுற்று ரவுண்டுகள் சுட்டுள்ளனர். இதில் ஜெயின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணா நகரில் வசிக்கும் ஜெயின் பாத்திர தொழில் செய்து வந்தவர் ஆவார். இவருக்கு எதிரிகள் யாரும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வாருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருவதாக துணை போலீஸ் கமிஷனர் ஷஹ்தரா தெரிவித்துள்ளார்.
நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில் பொது கழிப்பறையை 'ஃப்ளஷ்' செய்வது தொடர்பாக அக்கம்பக்கத்தினருக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளது.
பிகாம் சிங் என்ற நபர் தனது பக்கத்து வீட்டுக்காரர் சுதீர் என்பவரை சமையலறை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களையும் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி பொதுச்செயலாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சியில் குற்றவாளிகள் முற்றிலும் அச்சமற்றவர்களாக மாறிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.