search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்று அர்த்தமில்லை- தலைமை நீதிபதி சந்திரசூட்
    X

    நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்று அர்த்தமில்லை- தலைமை நீதிபதி சந்திரசூட்

    • நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம்.
    • நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

    இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில், ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு எனது வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். சமூக மட்டத்தில், நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே இதுபோன்ற சந்திப்புகள் நடப்பது வழக்கம்தான். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை.

    நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம். பிரதமருடனும், மத்திய மந்திரிகளுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம்.

    ஆனால் அந்த உரையாடல், வழக்குகள் சம்பந்தப்பட்டது அல்ல. வழக்குகளை நாங்கள்தான் முடிவு செய்வோம். வாழ்க்கை, சமுதாயம் பற்றி பொதுவானதாகவே அந்த உரையாடல்கள் இருக்கும்.

    நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, இருதரப்பும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று அர்த்தம் அல்ல. இதுபோன்ற விஷயங்களை அரசியல் உலகம் முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் சுமுக தீர்வுக்காக நான் கடவுளை வேண்டியது உண்மைதான். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவன்.

    "பொதுவாகவே, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்திற்கு கட்டுப்படாத சுதந்திரம் என வரையறுக்கப்பட்டது. தற்போதும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதையே குறிக்கிறது. ஆனால் அது மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அல்ல.

    நம் சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வருகையால், மின்னணு ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் சில குழுக்கள் செயல்படுவதை காண முடிகிறது.

    இந்த குழுக்கள் நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தால், அதை நீதித்துறையின் சுதந்திரம் என்று அழைக்கின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நீதிபதிக்கு அவரது மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.

    நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்றோ, அல்லது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்றோ அர்த்தமில்லை. அது சுதந்திரம் பற்றிய எனது வரையறை அல்ல."

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×