search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராட்டிய மோடி; கைகூப்பி வணங்கிய தலைமை நீதிபதி: சுதந்திர தின விழாவில் நெகிழ்ச்சி
    X

    பாராட்டிய மோடி; கைகூப்பி வணங்கிய தலைமை நீதிபதி: சுதந்திர தின விழாவில் நெகிழ்ச்சி

    • தனது உரையில் இந்திய நீதித்துறையை மோடி புகழ்ந்து பேசினார்
    • தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததால் அனைவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

    இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    2014ல் முதல் முறை பிரதமராக பதவியேற்றதில் தொடங்கி இவ்வருடம் 10-வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடியேற்றம் முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் உரையை கேட்டனர்.

    அப்போது பேசிய பிரதமர் மாநில மொழியில் பாடத்திட்டங்களை அமைப்பது குறித்து தனது அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தெரிவித்தார். அத்துடன் நில்லாமல் இந்திய நீதித்துறையை புகழ்ந்து பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:

    "மாநில மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தீர்ப்புகளில் உள்ள செயலாக்க பாகம் (operating part) இனி மாநில மொழிகளிலும் மக்களுக்கு கிடைக்கும். இதற்காக, இந்த பணியை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதனை கேட்டதும் விருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மனம் நெகிழ்ந்து மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நோக்கி கும்பிட்டார். பின்னர் இது குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

    "ஜனவரி 26 குடியரசு தினத்தையும், உச்ச நீதிமன்றத்தின் தொடக்க நாளான ஜனவரி 28-ஐ கொண்டாடும் விதமாகவும் இந்த வருடம் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தொடங்கப்பட்டது. இதுவரை 9,423 தீர்ப்புகள் இந்திய மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் உட்பட 14 மொழிகள் அடங்கும். உச்ச நீதிமன்றம் தோன்றிய நாளிலிருந்து இதுவரை வழங்கப்பட்ட 35,000 தீர்ப்புகளும் விரைவில் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்ததனால் 99 சதவீத குடிமக்களுக்கு அவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மோடியின் பாராட்டும், அதற்கு தலைமை நீதிபதியின் நன்றி தெரிவித்தலும் காண்போரை பெருமையடைய செய்தது. இது சம்பந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

    Next Story
    ×