search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
    X

    ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

    • உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார்.

    உத்தரபிரதேசம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

    வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

    ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×