search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்- நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்- நாடு முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கியது

    • இரு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.
    • நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த பின்னர், தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டுவருகிறார். ஆனால் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூடுத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கினர். அதேசமயம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் ஆக்குவதற்கு ஒரு குழுவினர் தீவிரம் காட்டினர். ஆனால் தலைவர் பதவியை ஏற்க ராகுல் சம்மதிக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே (வயது 80), சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கின்றனர். பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்.

    மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் வாக்குச் சீட்டுகள் ஒன்றாக கலக்கப்படும். 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 24 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×