என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்- சுப்ரீம் கோர்ட்
- பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை.
- ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக அவர் கூறினார். அதன்படி, அப்போது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தநிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 58 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த 58 பேரின் மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்.பி.ஐ.) பரிந்துரை அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வாதிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில்கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த நடவடிக்கையால் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரி செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கடந்த மாதம் 7-ந் தேதி உத்தரவிட்டனர். வழக்கு மீதான தீர்ப்பையும் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நாளை மறுநாள் (4-ந் தேதி) பணிஓய்வு பெற இருப்பதால் பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வெளியிட சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி இன்று பகல் 11 மணிக்கு அந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
நீதிபதிகளின் ஒட்டுமொத்த கருத்துக்கள் அடங்கிய தீர்ப்பை நீதிபதி கவாய் வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது.
மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில்தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசை குறை கூற இயலாது.
மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் இருப்பதால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த 58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.
இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானது அல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது.
மத்திய அரசு பணமதிப் பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோவென்று உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது.
போதுமான ஆய்வுகளை செய்த பிறகுதான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது. காரணமே இல்லாமல் பணமதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதை ஏற்க இயலாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்கள் ஒருமித்த நிலையில் உள்ளன. ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.
அவர் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26(2) பிரிவின்படி மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள் தொடர்பாக அவர் மட்டும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு உள்ளார்.
அவர் தனது தீர்ப்பில், "500, 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்க செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும். வெறும் அறிவிப்பாக இருந்ததை ஏற்க இயலாது.
பணமதிப்பிழப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாக விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து அரசாணை மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்க கூடாது.
எனவே எனது கருத்துபடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல. ஆனால் மத்திய அரசு நடவடிக்கையை 2016-ம் ஆண்டே எடுத்து விட்டதால் அதை திரும்ப பெற இயலாது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிகாரத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது. எனவே அது சட்டப்பூர்வமானது இல்லை என்பதே எனது முதன்மையான கருத்து ஆகும் என்று கூறி உள்ளார்.
என்றாலும் மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால் அரசியல் சாசன அமர்வில் நான்குக்கு ஒன்று என்ற அளவில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்களுடன் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்