search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2019-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க சரத்பவார் ஒப்புக் கொண்டாா்: பட்னாவிஸ்
    X

    2019-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க சரத்பவார் ஒப்புக் கொண்டாா்: பட்னாவிஸ்

    • சரத்பவார் இரட்டை வேடம் போட்டார்.
    • உத்தவ் கூட்டணியை முறித்து எங்களது முதுகில் குத்தினார்.

    மும்பை :

    2019-ம் ஆண்டு மராட்டியத்தில் பா.ஜனதா - பிளவுபடாத சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு பிறகு சிவசேனா பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் திடீரென ஒருநாள் அதிகாலை 5 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பதவி ஏற்று அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் அந்த ஆட்சி 3 நாளில் கவிழ்ந்தது. கடந்த சில மாதங்களுக்கு அஜித்பவார், சரத்பவாருக்கு தெரிந்து தான் பதவி ஏற்றார் என கூறியிருந்தார்.

    இந்தநிலையில் அவர் 2019-ம் ஆண்டு பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க சரத்பவார் ஒப்புக்கொண்டார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனியார் டி.வி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் எங்களை (பா.ஜனதா) அணுகினர். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சரத்பவாரை சந்தித்து பேசினோம். அப்போது பா.ஜனதா-தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான திட்டமும் முடிவானது. அரசை அமைக்க எல்லா அதிகாரமும் எனக்கும், அஜித்பவாருக்கும் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம்.

    பதவி ஏற்புக்கு 3-4 நாள் இருந்தநிலையில், திடீரென சரத்பவார் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். அஜித் பவாருக்கு என்னுடன் வந்து பதவி ஏற்பது தவிர வேறு வழியில்லாமல் இருந்தார். இல்லையெனில் அவர் அம்பலப்படுத்தப்பட்டு அவரின் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்து இருக்கும். சரத்பவார் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பதவி ஏற்க வந்தார். உத்தவ் கூட்டணியை முறித்து எங்களது முதுகில் குத்தினார். ஆனால் சரத்பவார் இரட்டை வேடம் போட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றது குறித்து அவர் கூறுகையில், " என்னை துணை முதல்-மந்திரியாக்கியது முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் கட்சி பணியாற்ற தயாராக இருந்தேன். திடீரென துணை முதல்-மந்திரி பதவி ஏற்குமாறு கூறியது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அன்று எடுத்த முடிவு சரியானது என இப்போது நான் கூறுவேன். ஏனெனில் என்னால் தற்போது கட்சி, ஆட்சியை கவனிக்க முடிகிறது. எனவே நான் துணை முதல்-மந்திரியாக வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவு சரியானது என நம்புகிறேன் " என்றார்.

    Next Story
    ×