search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
    X

    பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

    • தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத யாத்திரையின்போது, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பூரி:

    ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர், குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். 9 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும்.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்கியது. தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் புரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத யாத்திரையின்போது, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால், லட்சக்கணக்கானோர் பூரி நகரில் திரண்டனர். ரத யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று வரும் ரத யாத்திரை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் யாத்திரையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×