என் மலர்
இந்தியா
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பார்: உதய் சமந்த்
- ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
- தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என சிவசேனா தலைவர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வர் யார் என்பதில் கூட்டணிக்குள் இழுபறி நீடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என சிவசேனா கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் பாஜக 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றதால் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஏற்கனவே துணை முதல்வராக இருந்தவருமான அஜித் பவார், தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பட்நாவிஸ் இன்று மாலை முதல்வராக பதவி ஏற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது.
#WATCH | Mumbai: "Eknath Shinde will take oath as Deputy CM of Maharashtra," says Shiv Sena leader Uday Samant pic.twitter.com/k5cclydmSr
— ANI (@ANI) December 5, 2024
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்கவில்லை என்றால், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் புதிய அரசின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் உதய் சமந்த் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக் கொள்வார் என உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கூட்டணிக்குள் நிலவி வந்த முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி தொடர்பான குழப்பம் தீர்வுக்கு வந்துள்ளது.