search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் - சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
    X

    தேர்தல் ஆணையம்

    அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் - சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

    • தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
    • அதில் அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்.

    சில அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறவில்லை என அறிக்கை அளிக்கின்றன. ஆனால் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக ஒவ்வொருவரிடமும் ரொக்கமாக நன்கொடை பெற்று பெரும் பணம் திரட்டி விடுகின்றன.

    இந்நிலையில், இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்.

    அப்படிச் செய்தால், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பெற்ற அனைத்து நன்கொடை விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்று கருதப்படுகிறது.

    ஒரு அரசியல் கட்சி பெறும் மொத்த நன்கொடையில் 20 சதவீதமோ அல்லது ரூ.20 கோடியோ இதில் எது குறைவோ அந்த தொகைக்குள்தான் ரொக்கமாக பெறப்பட வேண்டும்.

    அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிநாட்டு நன்கொடைகள் புகுந்து விடாமல் தடுக்க விவாதம் நடத்தப்பட்டு சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அளிக்கும் தொகையை காசோலையாகவோ அல்லது மின்னணு பரிமாற்ற முறையிலோ மட்டுமே அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த யோசனைகளை தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்த்தால், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கென தனி வங்கிக்கணக்கு தொடங்கி, அதன் வழியாகவே வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    சமீபத்தில் செயல்படாத நிலையில் உள்ள 284 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×