search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பலன் இருக்காது: குலாம் நபி ஆசாத்
    X

    தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பலன் இருக்காது: குலாம் நபி ஆசாத்

    • ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது.
    • எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு.

    ஸ்ரீநகர் :

    ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை.

    அடுத்த ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தங்களது சொந்த மாநிலத்தைத் தவிர பிற மாநிலங்களில் ஒன்றுமே இல்லை. மாநிலங்களில் 2, 3 கட்சிகள் கூட்டணி அரசு அமைத்திருந்தால் அது பலன் தந்திருக்கும். எனவே தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பலன் ஏற்படாது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. இப்படி இருக்கிறபோது, இவ்விரு கட்சிகளுடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், அதற்கு என்ன பலன்? மம்தா பானர்ஜி எதற்காக கூட்டணி அமைக்க வேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது?

    இதேபோன்றுதான் ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. எனவே இந்த மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு காங்கிரஸ் என்ன கொடுக்கும்? ஒன்றும் இல்லை.

    அப்படியே ஆந்திராவில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு பிற மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள் கிடையாது. காங்கிரஸ் அவருக்கு என்ன கொடுக்கும்?

    எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

    தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கும் இடையே வித்தியாசம் இல்லை. தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

    எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் 300 இடங்களில் வெற்றி பெற்றால், கூட்டணி இல்லாமல் கூட அதே எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற முடியும், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி கண்டது, ஆனால் மாநிலங்களில் அல்ல என்று சொல்லி இருக்கிறேன். மாநிலங்களில் எங்கெங்கு வலிமையான தலைமை இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி மீண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×