search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போக்சோ குற்றவாளிக்கு நல்ல குடும்ப பின்னணி உள்ளது எனக்கூறி ஜாமின்  வழங்கிய உயர்நீதிமன்றம்
    X

    போக்சோ குற்றவாளிக்கு 'நல்ல குடும்ப பின்னணி' உள்ளது எனக்கூறி ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்

    • போக்சோ வழக்கில் இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கேவலமானது.
    • குற்றம் சாட்டப்பட்டவர் தனது திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.

    மத்தியப்பிரதேசத்தில் மைனர் பெண்ணை வாட்சப் வழியாகவும் மொபைல் போன் வழியாகவும் ஆபாசமாக பேசி துன்புறுத்தியதாக கூறி ஏப்ரல் 4 ஆம் தேதி போக்சோவின் கீழ் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இளைஞரின் குடும்பம் நல்ல குடும்ப பின்னணியில் இருந்து வருகிறது என்பதை காரணமாக காட்டி கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இளைஞரின் ஜாமின் மனுவை மே 16 அன்று நீதிபதி ஆனந்த் பதக் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் மகன் செய்ததை நினைத்து வெட்கப்படுகிறோம் என்றும் அதே நேரத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டான் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிறைத்தண்டனை விதித்தால் மாணவரின் கல்லூரி வாழ்க்கை பாதிக்கும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் ஒரு நல்ல மனிதனாக மாறுவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என்றும் இனிமேல் எந்த விதத்திலும் அந்த மைனர் பெண்ணுக்கு அவர் எந்த சங்கடத்தையும் அல்லது துன்புறுத்தலையும் ஏற்படுத்த மாட்டார்" என்று உத்தரவாதம் அளித்தார்.

    ஆனால் அரசு தரப்பு இளைஞருக்கான ஜாமீனை எதிர்த்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வாட்ஸ்அப் மூலமாகவும் , மொபைல் போன் மூலமாகவும் பாதிக்கப்பட்டவரை எந்த நேரத்திலும் அழைத்து துன்புறுத்தியுள்ளார் என்று கூறி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போக்சோ வழக்கில் இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கேவலமானது என்றும் அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும், ஆகவே போபால் மருத்துவமனையில் 2 மாதங்கள் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கினார்.

    ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை போபால் மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் உதவி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×