என் மலர்
இந்தியா
சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம்
- சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
- இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் இந்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து சிம்லாவில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வங்கதேச இந்துக்களை காப்பாற்றுங்கள்," இந்துக்கள் மீதான அடாவடியை நிறுத்துங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனக்குரல் எழுப்பினர்.
"வங்கதேச இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அடாவடிகளை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்துக்கள் கொலை செய்யப்படுகின்றனர், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். எங்களது கோவில்கள் அழிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்," என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்துள்ளார்.