என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest"

    • ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை விரட்டி சென்றனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கியில் அதிபராக இருந்து வருபவர் ரெசெப் தையிப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த சில நாட்களாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்துள்ளது.

    துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோத்து மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக அவர் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    துருக்கியில் 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்து எக்கீம் இமாமோத்து போட்டியிட போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் அவர் கைது செய்யப்பட்டார்.


    அரசின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் அவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த போராட்டத்தின் போது ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் பொம்மை வேடம் அணிந்து விரட்டினார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    துருக்கியில் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக போலீசார் 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். ஏராளமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

    தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

    தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுக்கவில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே கொள்கையாக மத்திய அரசு வைத்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆர்ப்பாட்ட அழைப்பு மடல்.

    தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் வழங்கிய ஆட்சியை அனைவருக்கும் பலனளிக்கும் சாதனைத் திட்டங்களுடன் நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

    ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினேன்.

    தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கையாக விளங்கும் பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய - முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 12-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. உங்களில் ஒருவனான நான் திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியதுடன், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

    மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை - எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பா.ஜ.க. ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.

    திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

    சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன்.

    அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடன் கடந்த ஜனவரி 27-ஆம் நாள் டெல்லியில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்கள். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது.

    எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

    உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் எடுத்துரைத்தார்.

    மாநிலங்களவையிலும் திருச்சி சிவா எம்.பி. இது குறித்துப் பேசினார். இரு அவைகளிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இது குறித்து வலியுறுத்தியும், நிலுவைத் தொகையை வழங்குவதற்குப் பதில், "உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது" என்று திசைதிருப்பும் பதில்களே ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து கிடைத்தது.

    மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.

    வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
    • 'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல'

    கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை பணய கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர்.

    இரத்னனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா தெரிவிக்கிறது. காசா நகரம் முற்றாக சிதைக்கப்பட்டு கட்டடங்கள் கற்கலாக மட்டுமே மிஞ்சின. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

     

    இதற்கிடையில் கடந்த ஜனவரியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலிய பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இன்னும் 59 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. காசாவின் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தியது.

    மேலும் கடந்த வாரம் முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் காசாவின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 600 பேர் கொல்லப்பட்டனர். காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000 த்தை கடந்துள்ளது.

    இந்நிலையில் போரை நிறுத்த கோரி வடக்கு காசாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

    நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியாவில் சேதமடைந்த கட்டுமானங்களுக்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்

    'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல' போன்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர். "ஹமாஸே வெளியேறு!" என்ற கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். ஹமாஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைப்பதை வீடியோக்களில் காண முடிகிறது.

    போராட்டத்தில் சேருமாறு டெலிகிராம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் ஹமாஸ் காசாவை நிர்வகித்து வருகிறது. காசா மக்களை பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

    நினைத்த இடத்தில் குண்டுகளை வீசி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு, ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் சாக்கு சொல்லி வரும் வேளையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. போர் மற்றும் பட்டினியால் விரக்தியின் உச்சத்தில் உள்ள காசா மக்களுக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்பதே சர்வதேச சமூகத்தில் கேள்வியாக உள்ளது. 

    • 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தக் கோரி போராட்டம் நடந்தது.
    • இதில் கேரள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அவர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை வாழ்வாதாரமின்றி விட்டுச் சென்றுள்ளது. வறுமை மற்றும் துன்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் உடனடியாக கவனம் செலுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதியம் இல்லாததால் வாழ்க்கையை நடத்த போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்தல், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊதியத்தை அதிகரித்தல், வேலை நாட்களை 150 நாளாக அதிகரித்தல் ஆகியவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி வருகின்றனர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்யும்போது தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார். இதையொட்டி, தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் எழுப்ப முயன்றனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

    தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் நியாயம் தேவை என்ற பேனரை வைத்து இருந்தனர்.

    மாநிலங்களின் உரி மையை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    தொகுதிகளை குறைக்காதே, மத்திய அரசே தமிழகத்துக்கு துரோகம் இழைக்காதே என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

    • தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை
    • தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இதனையடுத்து, டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த முயன்று கைதாகினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை. அதில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

    மாறாக அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜகவினர், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை. நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?

    தற்போது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஐ.க. தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கினைப் பார்த்தால் என்ன தெரிகிறது? ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது. இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

    டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

    எனவே, ஒன்றிய அரசுக்குத் தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமெனில், டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு. சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் வழியில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர்
    • காவல் துறையினரை நோக்கி எச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து, பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசையை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடைய தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு காவலர்கள் கூறினர். அப்போது, நாய் ஏத்துற வண்டியில நான் ஏற மாட்டேன்"... நான் என்ன குற்றவாளியா? என்று கூறி காவல் வாகனத்தில் ஏற அவர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எச்.ராஜாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    • மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    • தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் புயலை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    சென்னையில், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையையும் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அண்ணாமலை, "ஒருவருடைய மடியில் கனமிருந்தால் மட்டும்தான் வழியில் பயம் இருக்கும். இன்றைக்கு தி.மு.க. அரசு மாபெரும் தவறு செய்திருக்கிறது. அதனால் பயத்தில் இருக்கிறார்கள்.

    ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்யும் போது குரல் வளையை நசுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவல் துறைக்கு இதுதான் வேலையா? தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் தடுத்து நிறுத்துகிறார்கள்.

    இன்றைக்கு தடுக்கட்டும். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22-ந்தேதி நடக்கலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எதை வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம். அது முதலமைச்சரின் வீடாக கூட இருக்கலாம்.

    எங்களை பொருத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் தேதி சொல்ல மாட்டேன். இந்த முறை காவல் துறைக்கு மரியாதை கொடுத்து தேதியை சொல்லி இருந்தோம். அவர்கள் இதுபோல் செய்வதால், ஒரு அரசியல் கட்சியாக நாங்களும் வேறு ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம்.

    நான் பேசினால் பல விஷயங்கள் வெளிவரும் என்பதால் என்னை பேச விடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்துக்கு போக விடாமல் செய்கிறார்கள். காவல் துறை என்ன வேண்டுமானாலும் முயற்சி எடுக்கட்டும்.

    எங்களை பொறுத்தவரை டாஸ்மாக் ஊழலில் யார் குற்றவாளிகள் என்று நாங்கள் கருதுகிறோமோ எல்லோரையும் ஜனநாயக முறையில் முற்றுகையிட எங்களுக்கு உரிமை இருக்கிறது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தி இதை தெரிவித்து உள்ளது.

    தமிழ்நாட்டு அரசியலை உலுக்குவதற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொண்டு வருவதற்கு பா.ஜ.க. முன்னெடுத்து இருக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டம் அச்சாணியாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்பது எனது அனுமானம். நான் பொறுப்பான பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை சொல்லி இருப்பது போல ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கும் என்று கூறுகிறேன். பா.ஜ.க. மீதுள்ள பயத்தால் போராட்டம் தடுக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

    • போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்கள் பலர் கைது
    • போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க இன்று (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்த தமிழக பா.ஜ.க. சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்கப்பட்டது.

    அதற்கு போலீசார் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. ஆர்ப்பாட்டம் வேண்டுமானால் நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதையடுத்து எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

    ஆனால் இப்போதைக்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. சில நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று போலீசார் கூறி அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதையடுத்து போலீஸ் தடையை மீறி சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று தமிழக பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க.வினர் இன்று முயன்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்று திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக சென்று டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக இன்று காலையிலேயே பா.ஜ.க. தொண்டர்கள் ராஜரத்தினம் மைதானத்துக்கு வர முயன்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்த வர முடியாதபடி போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


    இதேபோல் தமிழக பா.ஜ.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்துக்கு வராமல் தடுக்கும் வகையில் அவர்களின் வீடுகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு வெளியே வராமல் தடுத்து நிறுத்தினார்கள்.

    மேலும் ராஜரத்தினம் மைதானம் அருகே பா.ஜ.க.வினர் வராமல் தடுப்பதற்காக அங்கு வரும் சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் அருகில் இன்று காலையிலேயே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதேபோல் ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் பின்னி சாலை சந்திப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எழும்பூர் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வரும் சாலை, புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் வழியாக ராஜரத்தினம் மைதானத்துக்கு வரும் சாலை ஆகிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


    தடையை மீறி போராட்டம் நடத்த வரும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இன்று காலை 9.45 மணி வரை பா.ஜ.க. தொண்டர்கள் யாரையும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வர போலீசார் அனுமதிக்கவில்லை. வரும் வழியிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் காலையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.

    இதேபோல் சென்னை முழுவதும் ஆங்காங்கே பா.ஜ.க.வினர் தடுத்தி நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியில் ஒன்று கூடி போராட்டம் நடத்த புறப்பட்ட பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். சாலிகிராமத்திலும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அவர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வராமல் தடுப்பதற்காக அவரது வீட்டு முன்பு 15-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


    ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழக பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் வீடுகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீடு சென்னை பனையூரில் உள்ளது. அவர் போராட்டம் நடத்த வெளியே வராமல் தடுப்பதற்காக இன்று அதிகாலையிலேயே அவரது வீட்டு முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அவரது வீடு அருகே வந்த வாகனங்களையும் தடுத்து நிறுத்தினார்கள். இன்று காலை 11.00 மணியளவில் அண்ணாமலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    பா.ஜ.க. அறிவித்தது போல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட ஆயத்தமான அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத் தொடர்ந்து ராஜரத்னம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு சூழல் உருவானது.

    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
    • பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    திருப்பூர் :

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற கவனம் செலுத்தாமல் தமிழ் மொழியை பாதுகாப்பதாக கூறி தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    • குமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார்.
    • தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம்,பாரதிநகர் பகுதியை 200-க்கும் மேற்பட்டவர்கள் புதூர் பிரிவில் மளிகைகடை வைத்து நடத்தி வந்த குமார் என்பவரிடம் பலகாரசீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் அவரிடம் பணம் செலுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது முதிர்வு தொகையை அவர் கொடுக்க வேண்டும். ஆனால் தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதனையடுத்து தங்களிடம் மோசடி செய்து தலைமறைவான குமாரை கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை குமாரின் வீட்டு முன்பு முற்றுகையிட்டனர். மேலும் தங்களது பணத்தை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×