என் மலர்
இந்தியா
ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு சமூக உரிமைகளை வழங்குவது எப்படி? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
- அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
- ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கு திருமண அங்கீகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பாக தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. திருமண உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்கு கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவது, காப்பீடுகளில் துணைகளின் பெயர்களை சேர்த்தல் போன்ற அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரே பாலின தம்பதிகளுக்கு திருமண அந்தஸ்து வழங்காமல், அடிப்படை உரிமைகள் தொடர்பான இந்த பிரச்சினைகளில் சிலவற்றை எவ்வாறு தீர்க்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் புதன்கிழமை பதில் அளிக்கும்படி அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
ஓரினச்சேர்க்கை திருமண விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டியது பாராளுமன்றம் தானே தவிர, நீதிமன்றம் அல்ல என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தை அரசாங்கம் மற்றும் நீதித்துறை இடையிலான பிரச்சினையாக மாற்ற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஓரினச் சேர்க்கை தம்பதிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஓரே பாலின திருமணங்களை கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்ற இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த மேல்முறையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.