search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு
    X

    கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

    • பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு.
    • குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

    அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என டாக்டர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக சினிமாத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள், சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின.

    மறுபுறம் பஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின.

    அதேநேரம் இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் மறுநாளே கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்த நபர், சம்பவத்தன்று அந்த டாக்டர் தனியாக இருப்பதை பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த நவம்பர் 12-ந் தேதி முதல் கேமரா முன்பு விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

    மிகவும் வேகமாக நடந்து வந்த விசாரணை கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    அதன்படி இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னார்வலர் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார்.

    இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தொடர்ந்து, உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×