search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பாபா சித்திக் கொலையைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு எச்சரிக்கை விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் குழு
    X

    பாபா சித்திக் கொலையைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு எச்சரிக்கை விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் குழு

    • படுகொலை சம்பவத்திற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
    • உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

    பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது மட்டுமல்லாமல், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் சித்திக், கடந்த சனிக்கிழமை இரவு பாந்த்ரா கிழக்கில் உள்ள அவரது மகனும், எம்.எல்.ஏ.-வுமான ஜீஷன் சித்திக் அலுவலகத்தின் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலை சம்பவத்திற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.

    இது தொடர்பாக பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்புடைய ஷுபு லோங்கர் என்ற நபர் முகநூலில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். லோங்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவரது சகோதரர் பிரவின் லோங்கர் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரையும், காவல் துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்தனர்.

    லோங்கரின் முகநூல் பதிவில், "இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டிருந்தது, சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான் சித்திக் கொல்லப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பான பதிவில், "எங்களுக்கு யாருடனும் பகை இல்லை, ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் கும்பலுக்கு யார் உதவினாலும், உங்கள் கணக்குகளை ஒழுங்காக வைத்திருங்கள்," என்று லோங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக நடிகர் சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இடையே நிலவி வந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததில் சித்திக் மிகப்பெரிய பங்காற்றினார். இது தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு சித்திக் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்தில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் கலந்து கொண்டனர். இதில் வைத்தே இருவர் இடையே நிலவி வந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

    கடந்த ஆண்டு முதல் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததற்காக குறைந்தது இரண்டு பிரபலங்கள் பிஷ்னோய் கும்பலால் தாக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாபா சித்திக் மறைவை அடுத்து நடிகர் சல்மான் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

    தற்போதைய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை தெற்கில் உள்ள மலபார் ஹில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×