என் மலர்
இந்தியா

மும்பை- டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் மலம் கழித்த பயணி கைது
- பயணியின் தவறான நடத்தையை கண்டித்து விமான பணியாளர்கள் எச்சரிக்கை.
- ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் சம்பந்தப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
மும்பை- டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது அதன் தரையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாகக் கூறி டெல்லியில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24ம் தேதி அன்று ஏஐசி 866 விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு தகவலின்படி, இருக்கை எண் 17எப்-ல் பயணித்த ராம் சிங் என்பவர் விமானத்தின் 9வது வரிசையில் மலம்- சிறுநீர் கழித்து, துப்பினார் என தெரியவந்துள்ளது.
பயணியின் தவறான நடத்தையை கண்டித்து விமான பணியாளர்கள் அவருக்கு வாய்மொழியாக எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், விமானியின் கமாண்டிற்கும் நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவர் சம்பந்தப்பட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொதுவில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் ராம் சிங் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.






