search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதுவரை எந்த பிரதமரும், மோடி போன்று வெறுப்பு பேச்சுகளை பேசியது இல்லை- மன்மோகன்சிங்
    X

    இதுவரை எந்த பிரதமரும், மோடி போன்று வெறுப்பு பேச்சுகளை பேசியது இல்லை- மன்மோகன்சிங்

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான முற்போக்கான எதிர்காலத்தை அளிக்க முடியும்.
    • மனிதத்தன்மையற்ற பேச்சுகள் உச்சத்தை எட்டி விட்டன.

    புதுடெல்லி:

    57 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அவற்றில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 பாராளுமன்ற தொகுதிகளும் அடங்கும்.

    அதையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ''நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது'' என்று பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங் பேசியதாக பிரதமர் மோடி கூறியதற்கும் பதில் அளித்துள்ளார்.

    மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வளர்ச்சி அடிப்படையிலான முற்போக்கான எதிர்காலத்தை அளிக்க முடியும். அதில், ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் பாதுகாக்கப்படும்.

    ராணுவம் மீது 'அக்னிவீர்' என்ற மோசமான திட்டத்தை மோடி அரசு திணித்துள்ளது. தேசபக்தி, வீரம், சேவை ஆகியவற்றின் மதிப்பு 4 ஆண்டுகளுக்குத்தான் என்று பா.ஜனதா நினைக்கிறது. இது, அவர்களின் போலி தேசியவாதத்தை காட்டுகிறது.

    நான் தேர்தல் பிரசாரத்தில் தலைவர்களின் பொதுக்கூட்ட பேச்சுகளை ஆர்வமாக கவனித்து வருகிறேன். பிரதமர் மோடி, வெறுப்பு பேச்சுகளிலேயே மிகவும் கொடிய வகையை பின்பற்றி வருகிறார். அப்பேச்சுகள் முற்றிலும் பிளவு மனப்பான்மையுடன் உள்ளன.

    பொதுக்கூட்ட பேச்சின் கண்ணியத்தை குறைத்த முதலாவது பிரதமர் மோடியே ஆவார். பிரதமர் பதவியின் ஈர்ப்புத்தன்மையையும் அவர் குறைத்து விட்டார்.

    கடந்த காலத்தில் இருந்த எந்த பிரதமரும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ, எதிர்க்கட்சிகளையோ குறிவைத்து இத்தகைய வெறுப்புணர்வு கொண்ட, பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியது இல்லை.

    மேலும், நான் சொன்னதாக அவர் சில பொய்யான கருத்துகளை தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையில் நான் ஒரு சமுதாயத்தை மற்ற சமுதாயங்களிடம் இருந்து பாகுபடுத்தியது இல்லை. அதற்கு காப்புரிமை பெற்ற ஒரே கட்சி, பா.ஜனதாதான்.

    நாட்டு மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதத்தன்மையற்ற பேச்சுகள் உச்சத்தை எட்டி விட்டன. இந்த பிளவு சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவது நமது கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×