என் மலர்
இந்தியா

கடும் அமளி எதிரொலி: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
- கடந்த மூன்று அலுவல் நாட்களில் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு
- இன்று காலையிலும் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பாதிக்கப்பட்டன. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 2 நாட்களாக முடக்கப்பட்டது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடங்கியது. பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் பிரச்சினையை கிளப்பினார்கள்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. சபை கூச்சல்-குழப்பம் நிறைந்து காணப்பட்டது. இதனால் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபா நாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.
மேல் சபையிலும் மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைக்காக அமளி நிலவியது. ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி அந்த கட்சி நோட்டீஸ் கொடுத்தது.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் அவை தலைவர் ஜெகதீப் தன்கர் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 4-வது நாளாக முடங்கியது.






