என் மலர்
இந்தியா
மணப்பெண் கிடைக்காததால் விரக்தி: இளைஞர்கள் திருமண வேடத்தில் சென்று கலெக்டரிடம் நூதன கோரிக்கை
- மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது.
- ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
புனே :
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர்.
இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், கலெக்டர் அலுவலகத்தில் ஏதோ கூட்டு திருமண விழா நடக்கப்போவதாக நினைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் நூதன போராட்டம் செய்தது பின்னர் தான் தெரியவந்தது.
ஊர்வலகத்தின் போது திருமண உடையில் குதிரையில் மிடுக்காக சென்றாலும், கலெக்டர் அலுவலகம் சென்றதும் அவர்களது முகத்தில் கவலை தொற்றி கொண்டது. கலெக்டரை சந்தித்த அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் கூறியதாவது:-
எங்களது ஊர்வலத்தை பார்த்து மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இதனால் திருமண வயதை அடைந்த பிறகும் இளைஞர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. பெண் சிசுக்கொலைகள் தான் இந்த பாலின வித்தியாசத்துக்கு முக்கிய காரணம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசே பொறுப்பு. கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.