என் மலர்
இந்தியா
மக்களவை தாக்குதல் எதிரொலி - பார்வையாளர்கள் பாஸுக்கு தடை
- சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் பாஸ் பெற்று உள்ளே நுழைந்துள்ளனர்
- புது டெல்லியில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
மக்களவையில் இன்று மதியம், சபை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென கீழே குதித்த இருவர் கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி சென்றனர். அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குண்டுகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது.
இச்சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வேறு சில உறுப்பினர்கள் அந்த இருவரையும் துணிந்து மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் நடந்த அதே நேரம் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷமிட்டபடி புகை குண்டுகளை வீசினர். அவர்களும் காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் புது டெல்லி துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
மக்களவையின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்ற, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் எனப்படும் இரு நபர்களும் பார்வையாளர்களாக உள்ளே சென்று சபை நடவடிக்கைகளை காண, எம்.பி.க்களின் பரிந்துரையில் வழங்கப்படும் "பாஸ்" (அனுமதிச்சீட்டுக்களை) பெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பார்வையாளர்களுக்கான பாஸ் வழங்குதலை நிறுத்தவும் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட புது டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.