search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிகாரம் ஒருவர் கையில் குவிவதை மக்கள் தடுத்துள்ளனர்-சரத்பவார்
    X

    அதிகாரம் ஒருவர் கையில் குவிவதை மக்கள் தடுத்துள்ளனர்-சரத்பவார்

    • பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.
    • ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர்.

    புனே:

    மராட்டியத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கட்சியின் 25-வது நிறுவன தினம் புனேயில் உள்ள அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தலைவர் சரத்பவார் பேசியதாவது:-

    ஆட்சி அதிகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடி கைகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்களின் ஆணை அவர்களுக்கு சாதகமாக இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெற்ற இடங்களை ஒப்பிடுகையில், இந்த முறை அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாராளுமன்றத்தில் அவர்களின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.

    ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறவில்லை என்றால், அவர்கள் பெரும்பான்மையை பெறுவது கடினமாகிவிடும்.

    கடந்த 5 ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர். நாட்டை பற்றி பரந்த கண்ணோட்டத்தில் அவர்கள் சிந்திக்கவில்லை. அதிகாரத்தை மையப்படுத்த அவர்கள் விரும்பினர்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்கள் நிலையை உணர்ந்து அதிகாரம் ஒன்று அல்லது 2 பேரின் கைகளில் குவிவதை தடுக்கும் வகையில் வாக்களித்துள்ளனர்.

    முழு அதிகார பரவல் நடக்கவில்லை என்றாலும், அதிகார பரவலாக்கத்தின் பாதையில் செல்லும் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக செயல்முறையை தொடங்கி உள்ளனர்.

    தற்போது மராட்டிய சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றுவதும், உழைப்பதும் என்னுடைய மற்றும் உங்களின் கூட்டு பொறுப்பாகும். இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகாரம் உங்களிடம் இருக்கும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×