search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- பினராயி விஜயன்
    X

    வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- பினராயி விஜயன்

    • நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது.
    • 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

    வயநாடு:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி காப்பாற்றப்பட வேண்டிய நபர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், இனி அங்கிருந்து மீட்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்றும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

    நிலம்பூர் பகுதியில் சாலியாற்றில் மிதந்து வரும் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணி அளவிட முடியாதது.

    200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. முண்டகை, சூரல்மலை பகுதிகளுக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள் செல்ல முடியாததால், மண்ணுக்குள் சிக்கிய உடல்களை மீட்க முடியவில்லை.

    இப்போது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து செய்ய வேண்டிய செயல்களே ஆகும். அதனை அரசு பொறுப்புடன் மேற்கொள்ளும்.

    இந்த பகுதியில் சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கோழிக்கோட்டில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வயநாட்டிற்கு வந்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்தபடி வயநாட்டில் நிலச்சரிவு, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர் மேப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயன் மேப்பாடி, சூரல்மலை பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னா் சூரல்மலையில் அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தை பார்வையிட்டார். மேலும் நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    Next Story
    ×