search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    PM Modi
    X

    10 மணி நேரம் ரெயிலில் பயணித்து உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

    • பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார்.
    • இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரெயிலில் செல்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் போலந்தில் பயணம் மேற்கொள்கிறார். இதன் மூலம் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.

    போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ஆகியோரைச் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அங்கு வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடுகிறார்.

    போலந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, அங்கிருந்து ரெயில் மூலம் வரும் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.

    ரஷிய போர் தொடங்கியதற்கு பின் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி போலந்தில் இருந்து சொகுசு ரெயில் மூலம் உக்ரைன் செல்கிறார். சுமார் 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தன்மயா லால் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுக்கு மேலாக இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.

    கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×