search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி7 மாநாடு: இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
    X

    ஜி7 மாநாடு: இத்தாலி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

    • ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
    • பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கி லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.

    ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டுச் சென்றார்.

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் மட்டும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மாநாட்டின் மற்றொரு பகுதியாக சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது ரஷியாவிற்கு எதிரானது என கருதப்படுவதால் பிரதமர் இதில் பங்கேற்பதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்படி அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசுகிறார். இதேபோல இத்தாலி, கனடா பிரதமருடனும் அவர் பேசுகிறார்.

    பிரதமர் மோடி இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு நாளையே நாடு திரும்புகிறார்.

    பிரதமரின் இத்தாலி பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா கூறுகையில், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது கடந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவுகளை பின் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். ஜி7 மாநாட்டில் இந்தியா தொடர்ந்து பங்கேற்பது உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதை சுட்டிக்காட்டுகிறது.

    உக்ரைன் மோதலை தீர்க்க பேச்சுவார்த்தைதான் சிறந்த வழி என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். சுவிட்சர்லாந்தில் நடை பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என தெரிவித்தார்.

    ஆனால் அமைதி மாநாட்டில் இந்தியா சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

    Next Story
    ×