search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி: வரவேற்ற ராகுல் காந்தி
    X

    புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி: வரவேற்ற ராகுல் காந்தி

    • பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது.
    • இந்த மிக முக்கியமான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

    புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் "கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

    மனித நேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கிய பாஜக-வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது.

    இந்த மிக முக்கியமான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும், பாஜக அரசாங்கங்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்கில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல.

    சமீப காலமாக நாட்டில் தொடங்கியுள்ள புல்டோசர் கலாச்சாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் மீது புல்டோசர் ஓட்டுவது நீதியல்ல. உடனடி நீதி போன்ற கோட்பாடுகள் ஒரு நாகரிக மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை ஆத்மாவுக்கு முற்றிலும் எதிரானவை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கொள்கை (நடவடிக்கை) என்று குற்றம் செய்பவர்களின் வீடுகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.

    சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார்.

    அப்போது நீதிபதி கவாய் "கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ காட்டத்தையோ எப்படி இடிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், "ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும்பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டன" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத்தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

    மேலும் இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தாவே மற்றும் சி.யு. சிங் ஆகியோர், தங்களது கட்சிக்காரர்கள் 50-60 வருடங்களாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரரின் மகன் சரியில்லை என்பதற்காகவோ அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதனாலோ அடாவடியாக எடுத்தவுடனே அவரின் வீட்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

    Next Story
    ×