search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தனது மூன்று பணக்கார நண்பர்களுக்கு உதவ பிரதமர் எடுத்த முடிவு- ராகுல் காந்தி
    X

    (கோப்பு படம்)

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தனது மூன்று பணக்கார நண்பர்களுக்கு உதவ பிரதமர் எடுத்த முடிவு- ராகுல் காந்தி

    • இந்த முடிவு விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
    • இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும்.

    பிலோலி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் தமிழகம், கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானாவை தாண்டி மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தை அடைந்தது.

    இந்நிலையில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 6வது ஆண்டு நினைவு நாளான இன்று பிலோலி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

    தனது மூன்று பில்லியனர் நண்பர்களுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை ஏகபோகமாக்குவதை உறுதி செய்ய பே பி.எம். மேற்கொண்ட நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார். 2016 ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி பேடிஎம் என்பதை மாற்றி பே சிஎம், பே பிஎம் என்ற வார்த்தை பயன்படுத்தி வருகிறது. தற்போது பிரதமர் மோடி குறித்து அந்த வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தெக்லூரில் பேசிய ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும் என்றார். அதற்கு முன்பு யார் நினைத்தாலும் அதை பாதியில் நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×