என் மலர்
இந்தியா

இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு செயலுக்கும் உரிய பதிலடி தரப்படும்: ராஜ்நாத்சிங் உறுதி
- அன்னிய படையெடுப்பாளர்கள், நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர்.
- கலாசார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர்.
புதுடெல்லி :
தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பொக்ரானில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதன் 25-வது ஆண்டு விழாவும் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-
அன்னிய படையெடுப்பாளர்கள், நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர். கலாசார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர்.
இந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோம். இத்தகைய வரலாறு மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்.
ஆனால், 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பினோம். அதாவது, நாங்கள் அமைதியை விரும்பும் நாடாக இருக்கலாம். ஆனால், நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் எரிக்கப்படுவதையோ, சோமநாதர் ஆலயம் மீண்டும் சூறையாடப்படுவதையோ சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதுதான் அச்செய்தி.
இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடிக்கும் உரிய பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.






