search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராம்விலாஸ் பஸ்வான் வசித்த டெல்லி பங்களாவில் குடியேறினார் ராம்நாத் கோவிந்த்
    X

    ராம்விலாஸ் பஸ்வான் வசித்த டெல்லி பங்களாவில் குடியேறினார் ராம்நாத் கோவிந்த்

    • ராம்நாத் கோவிந்த் இறுதிக்காலம் வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசிக்கலாம்.
    • அவருக்கு மாதம் ரூ.2½ லட்சம் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.

    புதுடெல்லி :

    புதிய ஜனாதிபதியாக நேற்று திரவுபதி முர்மு பதவி ஏற்றதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புதிய பங்களாவுக்கு புறப்பட்டார்.

    டெல்லி ஜன்பத் சாலை 12-ம் எண் முகவரியில் உள்ள பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நீண்ட காலமாக குடியிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவருடைய மகன் சிராக் பஸ்வான் எம்.பி. குடியிருந்தார்.

    மத்திய அரசின் நோட்டீசை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் வீட்டை காலி செய்தார். பின்னர், ராம்நாத் கோவிந்த் ஓய்வுக்கு பிறகு தங்குவதற்காக வீடு தயார் செய்யப்பட்டது.

    அந்த பங்களாவுக்கு ராம்நாத் கோவிந்த் காரில் சென்றார். மரபுப்படி, புதிய ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவருடன் சென்றார்.

    பங்களாவில், மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ஹர்தீப்சிங் பூரி, வி.கே.சிங், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர். அதுதொடர்பான புகைப்படத்தை கிரண் ரிஜிஜு, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.,

    ஜனாதிபதி ஊதியம் மற்றும் ஓய்வூதிய சட்டப்படி, ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும். மாத ஊதியத்தில் 50 சதவீதம், அதாவது ரூ.2½ லட்சம் அவருக்கு மாத ஓய்வூதியமாக கிடைக்கும்.

    தனது இறுதிக்காலம்வரை டெல்லியில் உள்ள ஆடம்பர பங்களாவில் அவர் வசிக்கலாம். அவருக்கு ஒரு தனி செயலாளர், ஒரு கூடுதல் தனி செயலாளர், ஒரு தனி உதவியாளர், 2 பியூன்கள் ஆகியோர் ஒதுக்கப்படுவார்கள். அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

    இலவச மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்கப்படும். விமானம், ரெயில், கப்பல் ஆகியவற்றில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் உயர் வகுப்பில் பயணம் செய்யலாம். 2 தொலைபேசிகள் (அகண்ட அலைவரிசை இணைப்புக்காக ஒன்று உள்பட), தேசிய ரோமிங் வசதியுடன் செல்போன், ஒரு கார் அல்லது கார் வைத்துக்கொள்வதற்கான படிகள் ஆகியவை வழங்கப்படும்.

    ஒருவேளை, அவர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஓய்வுபெற்ற துணை ஜனாதிபதிக்கான சலுகைகள் எதுவும் அளிக்கப்படாது.

    ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் வாழ்க்கை துணைக்கும் நிறைய சலுகைகள் உண்டு. அவருக்கு டெல்லியில், வாடகை இன்றி பங்களா ஒதுக்கப்படும். அதற்கான பராமரிப்பு செலவும் அளிக்கப்படும்.

    ஓய்வுபெற்ற ஜனாதிபதி பெற்றதில் 50 சதவீத தொகை, அவருக்கு மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். இறுதிக்காலம்வரை மருத்துவ சிகிச்சை உண்டு. தனி செயலாளர், பியூன் ஆகியோருடன் அலுவலக செலவாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம்வரை கிடைக்கும்.

    ஒரு இலவச தொலைபேசி, கார் ஆகியவையும், ஒரு நபரை துணைக்கு வைத்துக்கொண்டு, ஆண்டுக்கு 12 தடவை இந்தியாவில் உயர்வகுப்பு பயணமும் செய்யலாம்.

    Next Story
    ×