search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பரபரப்பான சூழலில் பாராளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது
    X

    பரபரப்பான சூழலில் பாராளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது

    • பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பா்.
    • மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3-வது முறையாக கடந்த 9-ந்தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடி பதவி ஏற்ற பிறகு பாராளுமன்றக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது.

    240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்தது. ஆனாலும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்தது.

    இந்தச் சூழலில், 18-வது பாராளுமன்றத்தின் மக்களவை முதல் கூட்டத் தொடா் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் 27-ந்தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளாா்.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பா். மக்களவை இடைக்கால தலைவா் பா்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். வருகிற 26-ந்தேதி பாராளுமன்றத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2 முறை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் கோலோச்சியது. இந்த முறை எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பதால் கூட்டத்தில் அனல் பறக்கும்.

    ஒடிசா மாநிலம், கட்டாக் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தொடா்ந்து 7-வது முறையாக தோ்வான பா்த்ருஹரி மகதாப், மக்களவை இடைக்கால தலைவராக சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த இவா், பாராளுமன்றத் தோ்தலுக்கு முன்னா்தான் பா.ஜ.க.வில் இணைந்தாா்.

    அதேநேரம், காங்கிரசை சோ்ந்த 8 முறை எம்.பி.யான கே.சுரேசுக்கு மக்களவை இடைக்கால தலைவா் பதவியை வழங்காதது குறித்து மத்திய அரசை அக்கட்சி விமா்சித்தது. தலித் என்பதால், அவரை புறக்கணித்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    காங்கிரசின் குற்றச்சாட்டை நிராகரித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, பல்வேறு முன்னுதாரணங்களை சுட்டிக் காட்டினாா். மேலும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாக அவா் பதில் குற்றச்சாட்டை முன் வைத்தாா்.

    இந்த சர்ச்சையை தொடக்கத்திலேயே எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேபோல் புதிய சபாநாயகர் தேர்விலும் ஒருமித்த கருத்து ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே பாராளுமன்றத் தலைவா் பதவியை எதிா்பாா்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்காது என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிா்லா பாராளுமன்ற அவைத் தலைவராக செயல்பட்டாா். அவருக்கே பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவா்கள் டி.புரந்தரேஸ்வரி, ராதா மோகன் சிங் உள்ளிட்டோரின் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், பாராளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி தரப்பில் வேட்பாளா் களமிறக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. கருத்தொற்றுமை அடிப்படையில் பாராளுமன்றத் தலைவா் தோ்வாவது சிறப்பாக இருக்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

    Next Story
    ×