search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பண மதிப்பிழப்பு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜனதா ஆதரவு: காங்கிரஸ் எதிர்ப்பு
    X

    பண மதிப்பிழப்பு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜனதா ஆதரவு: காங்கிரஸ் எதிர்ப்பு

    • வருமானவரி வசூலை அதிகரித்தது.
    • பொருளாதாரத்தை சுத்தப்படுத்தியது.

    புதுடெல்லி :

    பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பண மதிப்பிழப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. தேச நலனுக்காக எடுத்த அம்முடிவு செல்லும் என்று கூறியுள்ளது.

    ராகுல்காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்தார். வெளிநாடுகளில் கூட குறை கூறினார். அவர் இப்போதாவது வருத்தம் தெரிவிப்பாரா?

    ப.சிதம்பரம் போன்றவர்கள், பெரும்பான்மை தீர்ப்பை கண்டுகொள்ளாமல், ஒரே ஒரு நீதிபதி அதிருப்தி தெரிவித்ததை முன்னிலைப்படுத்துகிறார்கள். அந்த நீதிபதி கூட 'இது நல்ல நோக்கம் கொண்ட நடவடிக்கை' என்றுதான் கூறி இருக்கிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை நிறுத்தியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு சம்மட்டி அடியாக அமைந்தது. வருமானவரி வசூலை அதிகரித்தது. பொருளாதாரத்தை சுத்தப்படுத்தியது. மின்னணு பண பரிமாற்றத்தில் இந்தியாவை முன்னணி நாடாக்கியது.

    முறையற்ற பொருளாதாரத்தின் பங்கை 52 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முறையற்ற பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து விட்டதாக சொல்வது தவறு. முடிவு எடுக்கும் பணியை மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தனது விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

    ஆனால், பண மதிப்பிழப்பின் விளைவுகள் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பண மதிப்பிழப்பின் நோக்கங்கள் என்று கூறப்பட்ட எதுவுமே நிறைவேறவில்லை. உதாரணமாக, கருப்பு பண ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு என எதுவுமே நிறைவேறவில்லை.

    அதற்கு மாறாக, லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்களை அழித்தது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும், அமைப்புசாரா தொழில்களையும் அழித்தது. அதன் விளைவுகளை இன்றும் பாா்த்துக்கொண்டிருக்கிறோம்.

    இதற்கு யாராவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், இந்த 'துக்ளக்' முடிவை எடுத்த பிரதமர் மோடிதான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

    இந்த தீர்ப்பு, மத்திய அரசின் மணிக்கட்டில் விழுந்த அடி. பண மதிப்பிழப்பு முடிவை பெரும்பான்மை நீதிபதிகள் உறுதி செய்யவும் இல்லை. பண மதிப்பிழப்பின் நோக்கங்கள் நிறைவேறி விட்டதாகவும் கூறவில்லை.

    அந்த முடிவின் சட்டவிரோதத்தையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் பிரபலமான அதிருப்தி தீர்ப்புகளில் இது முக்கிய இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, பவன் கேரா ஆகியோரும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளனர்.

    Next Story
    ×