search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பி.க்கள் கண்ணியத்தைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்
    X

    எம்.பி.க்கள் கண்ணியத்தைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

    • சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ வைரலானது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மாநிலங்களவை உறுப்பினர்களை அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயலால் ஜெகதீப் தன்கர் கடும் அதிருப்தியில் உள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதையை பேணும்வகையில் இருக்க வேண்டும். அதுதான் நாம் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், துணை ஜனாதிபதியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.

    Next Story
    ×