search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது- மத்திய அரசு தகவல்
    X

    உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது- மத்திய அரசு தகவல்

    • போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.
    • மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதில் அளித்தார்

    புதுடெல்லி:

    உக்ரைன்-ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள். போர் காரணமாக அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை, குறிப்பாக உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லையா எனவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை இங்கு உள்ள மருத்துவக் கல்லுரிகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? எனவும் மக்களவை உறுப்பினர்கள் கவிதா மலோத் உள்ளிட்ட எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்றார். உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது என்றார்.

    'இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது' என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×