என் மலர்
இந்தியா
மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் கிராமத்தில் குண்டு வீசி தாக்குதல்
- நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
- அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் குண்டுகளை வீசினர்
மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் கிராமத்தில் குண்டு வீசி தாக்குதல்
இந்த ஆண்டு [2024] முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த வருடம் மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன் என்று பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி - மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரம் 250 பேர் வரை காவு வாங்கியது. இன்னும் கலவரம் ஓயாத சூழலில் கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்நிலையில் நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் முகாந்திரமாக பாஜகவின் பைரன் சிங் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் இன்று மீண்டும் கிளர்ச்சியாளர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தின் கடங்பண்ட் பகுதியில் இன்று [புதன்கிழமை] அதிகாலையில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கும் நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தாழ்வான கடங்பண்ட் பகுதியில் உள்ள கிராமத்தின் மீது அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் குண்டுகளை வீசியும் தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது .
நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். கிராமத்தினருடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 2023 மே மாதம் மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து கடங்பண்ட் பகுதி கிளர்ச்சியாளர்களால் அதிக தாக்குதலை சந்தித்துள்ளது.