search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்காளதேச வன்முறை: அடைக்கலம் தேடி வருவோருக்கு கதவுகள்  திறந்தே இருக்கும் - மம்தா உறுதி
    X

    வங்காளதேச வன்முறை: அடைக்கலம் தேடி வருவோருக்கு கதவுகள் திறந்தே இருக்கும் - மம்தா உறுதி

    • மனிதாபிமான நெருக்கடியின்போது அகதிகளுக்கு உதவ வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.
    • 'அகதிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில் மம்தாவுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது'

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்களால் கடந்த வாரம் முதல் கடுமையான போரட்டம் முன்னெடுக்கப்பட நிலையில் போராட்டம் கலவரமாக மாறி பல வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்த வன்முறையில் 133 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது . இந்நிலையில் இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.

    இருப்பினும் போரட்டம் இன்னும் அடங்காத நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.வங்காளதேச மக்கள் இந்த போராட்டதால் ஆபத்தான விளைவுகளை சந்தித்து வரும் நிலையில் வங்கதேச எல்லையில் உள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று நடந்த பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவரும் வங்கதேச மக்களுக்கு தங்கள் மாநிலத்தில் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மனிதாபிமான நெருக்கடியின்போது அகதிகளுக்கு உதவ வலியுறுத்தும் ஐநாவின் தீர்மானத்தை மம்தா மேற்கோள் காட்டினார்.

    இந்நிலையில் மம்தா வங்காள தேசத்தினருக்கு அடைக்கலம் தருவதாக வாக்களித்துள்ளது பாஜகவுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் அமித் மாளவியா, அகதிகளை அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ள நிலையில் மம்தாவுக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது என்றும் மேற்கு வங்காளம் முதல் ஜார்கண்ட் வரை வங்காளதேசத்தினரை குடியமர்த்தி தேர்தலில் வெற்றி பெற இந்தியா கூட்டணி வகுத்த சதித் திட்டம் இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    Next Story
    ×