என் மலர்
இந்தியா
எங்களோடு பாகிஸ்தானுக்கு என்ன சம்பந்தம்?: பாக். மந்திரியை விளாசிய உமர் அப்துல்லா
- நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை.
- அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு அம்மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி கடுமையாக எதிர்த்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப் பிறகு முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சியும் சொல்லி வருகிறது. தேசிய மாநாடு கட்சியும் கூறி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிஃப் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரும் விசயத்தில் நாங்களும் (பாகிஸ்தான்) தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஒரே பக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பி எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
எங்களோடு பாகிஸ்தானுக்கு என்ன தொடர்பு? நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இல்லை. அவர்களுடைய நாடு குறித்து அவர்கள் அக்கறை கொள்ளட்டும். நம்முடைய தேர்தல் அல்லது நம்முடைய தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் தலையிட வேண்டும் என நான் நினைக்கவில்லை. அவர்கள் அவர்களுடைய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கட்டும். நாம் நம்முடைய ஜனநாயகத்தில் பங்கேற்று வருகிறோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில் "பாகிஸ்தான் என்ன சொன்னது? என்பது குறித்து எனக்குத் தெரியாது. நான் இந்திய குடிமகன்" என்றார்.
பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாகிஸ்தான் ஆகியவரை சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவதில் ஒரே பக்கமாக இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கவாஜா ஆசிஃப் "உண்மையிலேயே, எங்களுடைய கோரிக்கை கூட அதுதான்... தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 370-ஐ சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது சாத்தியம். தற்போது தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் மிக முக்கியத்துவம் உள்ளது. இந்த விசயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் உத்வேகம் அடைந்துள்ளனர். தேசிய மாநாடு கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை தேர்தல் பிரச்சனையாக ஆக்கிவிட்டார்கள்" எனக் கூறியிருந்தார்.