search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மனைவியை தவிர இல்லற இன்பத்துக்கு ஒருவர் எங்கு செல்ல முடியும்? வரதட்சணை வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
    X

    மனைவியை தவிர இல்லற இன்பத்துக்கு ஒருவர் எங்கு செல்ல முடியும்? வரதட்சணை வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

    • கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய உறவில் உள்ள சிக்கலே இதற்கான அடிப்படை காரணம் என்பது தெரியவந்தது.
    • பிரஞ்சல் மீதான வரதட்சணை வழக்கை நீதிபதி அனிஷ் குமார் குப்தா ரத்து செய்தார்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரஞ்சல் சுக்லா என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மீஷா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, பிரஞ்சல் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் 2 பேர் மீது மீஷா வழக்கு தொடர்ந்தார்.

    தன்னை ஆபாச படங்கள் பார்க்கவும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் பிரஞ்சல் மீது மீஷா குற்றம் சாட்டியிருந்தார். தன்னை தனியாக விட்டுவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டதாகவும் அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதி அனிஷ் குமார் குப்தா முன்பு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையில், பிரஞ்சல் மீது கூறப்பட்ட வரதட்சணை புகார் பொய்யானது என தெரியவந்தது. ஏனெனில் திருமணத்துக்கு முன்பு கூட பிரஞ்சல் குடும்பத்தினர் வரதட்சணையாக பணம் எதுவும் கேட்கவில்லை என கண்டறியப்பட்டது.

    அப்படியென்றால் கணவன்-மனைவிக்கு இடையேயான பிரச்சனைக்கு காரணம் என்ன? என்று விசாரித்தபோது உண்மை வெளியானது.

    அதாவது கணவன்-மனைவி இடையேயான தாம்பத்திய உறவில் உள்ள சிக்கலே இதற்கான அடிப்படை காரணம் என்பது தெரியவந்தது. பிரஞ்சலுடன் பாலியல் உறவுக்கு மீஷா தொடர்ந்து மறுத்து வந்ததே இந்த பிரச்சனைக்கான காரணம் என கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பிரஞ்சல் மீதான வரதட்சணை வழக்கை நீதிபதி அனிஷ் குமார் குப்தா ரத்து செய்தார்.

    அந்த உத்தரவில் அவர் மேலும் கூறியதாவது:-

    பிரஞ்சல் மீதான வழக்கையும், மனைவியின் வாக்குமூலத்தையும் தீவிரமாக ஆய்வு செய்ததில் இருவருக்கு இடையே எதாவது தாக்குதல் நடந்திருந்தால் அது வரதட்சணைக்காக அல்ல என்பதும் எதிர் தரப்பினரின் (கணவர்) இல்லற இன்பத்துக்கு மறுத்ததால் நடந்தது என்பதும் உறுதியாகிறது. இதில் வரதட்சணை புகார் என்பது கட்டுக்கதை ஆகும்.

    இந்த விவகாரத்தில் இருதரப்புக்கு இடையேயான தகராறு, பாலியல் இணக்கமின்மை தொடர்பான சர்ச்சை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது, மேலும் இந்த தகராறு காரணமாக எதிர் தரப்பினரால் (மனைவி) தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உடனடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒழுக்கமான நாகரிக சமூகத்தில் ஒருவர் தனது சொந்த மனைவியை அல்லது கணவரை தவிர இல்லற இன்பத்துக்கு வேறு எங்கு செல்ல முடியும்?

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    Next Story
    ×