search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் 2024 - சிந்தாமல் சிதறாமல் அள்ளுமா, இந்தியா கூட்டணி?
    X

    தேர்தல் 2024 - சிந்தாமல் சிதறாமல் அள்ளுமா, இந்தியா கூட்டணி?

    • 2014, 2019 தேர்தல்களில் எளிதாக மோடி வென்று பிரதமர் ஆனார்
    • கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையின்மை பா.ஜ.க.விற்குத்தான் பயன்படும்

    பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. சில தினங்களில் அதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிடுவார்.

    2014ல் பாரதிய ஜனதா கட்சியை தலைமையாக கொண்டு அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை எதிர்த்து களமிறங்கியது. அதுவரை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டு, தேர்தலில் வென்று பிரதமரானார்.

    2019 தேர்தலில் மீண்டும் என்.டி.ஏ போட்டியிட்டு வென்று, பா.ஜ.க.வின் மோடி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

    2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த கடந்த 2023ல் பல மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் சுமார் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கின.

    ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட தங்கள் மாநிலங்களில் அதிக வெற்றி வாய்ப்புகளை உடைய கட்சிகளின் தலைவர்கள் இதை உருவாக்கினர்.

    இவர்கள் ஒருங்கிணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து மோடிக்கு எதிராக முன்னிறுத்துவார்கள் என்று அரசியல் விமர்சகர்களாலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களாலும் பெரிதும் நம்பப்பட்டு வந்தது.

    ஆனால், அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் தனித்து போட்டியிட போவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கூட்டணி ஆட்சி குறித்து பேச முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "திரிணாமுல் காங்கிரஸ் இல்லையென்றால் இந்தியா கூட்டணி இல்லை" என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.


    இதே போல், ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டது.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி சம்பந்தமாக சரிவர பேசுவதில்லை என சில மாதங்களுக்கு முன் நிதிஷ் விமர்சித்திருந்தார்.

    தொடக்கம் முதலே கூட்டணிக்கு தலைமை பொறுப்பை காங்கிரஸ் விரும்பியது தெளிவாக தெரிந்தது. பிரதமர் வேட்பாளராக ராகுலை பிற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைமை விரும்புகிறது.

    கடந்த நவம்பரில் காங்கிரஸ் கட்சி, வட இந்தியாவில் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியடைந்தது.


    இப்பின்னணியில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை காங்கிரசுடன் ஒத்து போகவில்லை.

    மேலும், கேரளாவில் பா.ஜ.க. இன்னும் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளரவில்லை. அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்று என காங்கிரஸ் உள்ள நிலையில், அவர்களாலும் மாநிலத்தில் எதிர்த்து மத்தியில் ஆதரிக்க முடியுமா என்பது சந்தேகமே.

    தமிழ்நாட்டில் "நாற்பதும் நமதே" என களமிறங்கியுள்ள தி.மு.க. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கொடுக்க சம்மதிப்பதும் கேள்விக்குறிதான்.


    தமிழகத்தை பொறுத்த வரை நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், கேட்கும் இடங்களை தி.மு.க. தராவிட்டால் அக்கட்சி 40 இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் வதந்திகள் உலா வருகிறது.

    நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் வழக்கம் போல் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளில் எத்தனை பேர் அ.தி.மு.க. அணிக்கு தாவி செல்வார்கள் என்பதும் உறுதியாகவில்லை.

    இப்பின்னணியில், வெல்வதில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள தி.மு.க., காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்வது கடினம்.

    தே.ஜ.கூ. அணியில், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த பிரதமர், அந்த வெற்றியை அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்தலாம். இது மக்களவை தேர்தலில் முக்கிய மாநிலமான உ.பி.யில் உள்ள இடங்களை வெல்ல பா.ஜ.க.விற்கு பயன்படும்.

    காங்கிரசின் முதன்மை பதவிக்கான ஆசை, பிரதான கூட்டணி தலைவர்களின் மாநிலத்தில் மட்டுமே உள்ள செல்வாக்கு, தற்போது நிலவும் ஒற்றுமையின்மை, ஒரு சில தலைவர்களின் "மதில் மேல் பூனை" நிலைமை ஆகியவை "வெல்ல முடியாதவர்" என்கிற பிம்பம் கொண்ட பிரதமர் மோடிக்கு வலு சேர்க்கவே பயன்படும் என்பதை இந்தியா கூட்டணி உணர்ந்தாக வேண்டும்.


    "ஊர் ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும் பழமொழியை "இந்தியா கூட்டணி" தலைவர்கள் நினைவில் வைத்து கொள்வது நல்லது. அவர்களது ஒற்றுமையின்மையால் மோடி "ஹாட்ரிக்" அடிக்க வாய்ப்புண்டு.

    Next Story
    ×