search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்
    X

    மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

    • மத்திய மந்திரிசபை மகளிர் இடஒதுக்கீடு மாசோதாவிற்கு ஒப்புதல்
    • இந்த மசோதா எம்.பி.களுக்கான அக்னி பரீட்சை என மந்திரி சபை கூட்டத்தில் மோடி பேசியதாக தகவல்

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில் 3 பொது தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருந்தது.

    2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி அந்த இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அது சட்டமாக முடியாமல் போனது.

    அதன் பிறகும் பல தடவை மக்களவையில் அந்த மசோதாவை நிறை வேற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால் சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற இயலவில்லை.

    இந்த நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி சாதனை படைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நேற்று இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று காலை அதிகாரப்பூர்வமாக பிரியாவிடை அளிக்கப்பட்டது.

    பழைய பாராளுமன்றம் முன்பு அமர்ந்து எம்.பி.க்கள் கூட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மைய மண்டபத்தில் எம்.பி.க்கள் கூடினார்கள்.

    அங்கிருந்து பிரதமர் மோடி தலைமையில் எம்.பி.க்கள் புதிய பாராளுமன்றத்துக்கு அணிவகுத்து சென்றனர். அமைச்சர்கள் புடைசூழ பிரதமர் மோடி முதலில் சென்றார். அவர்கள் புதிய பாராளுமன்றத்தில் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.

    இன்று பிற்பகல் புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுகின்றன. அந்த கூட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    பாராளுமன்றத்தில் மொத்தம் 543 எம்.பி.க்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும்.

    அதுபோல நாடு முழுவதும் 4,126 எம்.எல்.ஏ. தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால் 1,362 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். தமிழகத்தில் பெண்களுக்கு 13 எம்.பி. தொகுதிகளும், 77 சட்டசபை தொகுதிகளும் கிடைக்கும்.

    இதன் மூலம் பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்கள் அதிகளவு நுழைய வாய்ப்பு ஏற்படும்.

    இதற்கிடையே மந்திரி சபை கூட்டத்தில், இந்த மசோதா பாராளுமன்ற எம்.பி.களுக்கான அக்னி பரீட்சை என பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    Next Story
    ×