search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பெர்த் ஆடுகளம் தாறுமாறாக எகிறும்- இந்தியாவுக்கு பிட்ச் பராமரிப்பாளர் எச்சரிக்கை
    X

    பெர்த் ஆடுகளம் தாறுமாறாக எகிறும்- இந்தியாவுக்கு பிட்ச் பராமரிப்பாளர் எச்சரிக்கை

    • அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம்.
    • போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு இப்போதே எச்சரித்துள்ளார். சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் விளையாடிவிட்டு வந்துள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டியே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.

    இசாக் மெக்டொனால்டு கூறுகையில், 'இது ஆஸ்திரேலியா....அதிலும் பெர்த்... இங்கு தொடர்ச்சியாக அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம். சரியாக சொல்வது என்றால் கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ அதையே பின்பற்ற விரும்புகிறேன். சென்ற ஆண்டு இங்கு டெஸ்டின் போது (ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்) ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டு இருந்தது. இது நல்ல தொடக்க புள்ளியாக அமைந்தது.

    ஏனெனில் புற்கள் காரணமாக முதல் 3 நாட்கள் மிகுதியான வேகம் காணப்பட்டது. ஆனால் இரு அணியிலும் புயல்வேக பவுலர்கள் இருந்ததால் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆண்டும் அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் இத்தகைய சூழலை சிறப்பாக எதிர்கொண்டு துரிதமாக ரன் எடுக்க முடிந்தது போல் இந்த முறையும் எடுக்க முடியும். இந்த டெஸ்ட் 5-வது நாளுக்கோ அல்லது கடந்த ஆண்டை போல 4-வது நாளின் கடைசி பகுதிக்கோ செல்லும் என்று நம்புகிறேன். போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்' என்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 89 ரன்னில் சுருண்டது. அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் 'பவுன்ஸ்' பந்துகளில் உடலில் அடிவாங்கினர். குறிப்பாக லபுஸ்சேன் எனது வாழ்க்கையில் விளையாடிய கடினமான பிட்ச் இது தான் என்று அப்போது குறிப்பிட்டார்.

    வேகப்பந்து வீச்சாளர்களுக்கே ஆடுகளம் ஒத்துழைக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் தெளிவுப்படுத்திய நிலையில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் ஆகியோரும் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்.

    Next Story
    ×