என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ராவுக்கு பதில் புவனேஷ்வர் குமார் - ஸ்ரீகாந்த்
- லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
- முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடருக்கான எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளும், பி பரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இரண்டு பிரிவுகளிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்த தொடருக்கான லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா குணமடைய மார்ச் மாதம் ஆகும். இதனால், அவர் லீக் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை கொண்டுவரலாம் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இன்றும் புவனேஷ்வர் குமாரால் பந்தை இரண்டு புறமும் ஸ்விங் செய்து வீச முடியும். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின்போது அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரை இந்திய அணி தற்போது மறந்தே விட்டது."
"என்னை பொருத்தவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரை கொண்டு வந்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும்" என்றார்.