என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக்: உபி வாரியர்ஸ் அணிக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

- குஜராத் அணியின் மூனி 96 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
லக்னோ:
5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.
இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தியோல் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூனி அரை சதம் அடித்து அசத்தினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.